10 ஆயிரம் ரசிகர்களை ஒரே நேரத்தில் உள்ளே அடைக்குமளவு மிகப் பெரிய தியேட்டரான தங்கம் இப்போது படம் காட்டாமல் பாழடைந்து போய்க் கிடக்கிறது. 1952ம் ஆண்டு இந்த பழம்பெரும் தியேட்டர் தனது திரையோட்டத்தை பராசக்தி படம் மூலம் தொடங்கியது. இந்த தியேட்டரை உருவாக்கியவர் பிச்சைமுத்துக் கோனார் என்பவர். உலகின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமை படைத்த அமெரிக்காவின் பிளான்விடா தியேட்டரைப் போல மதுரையில் உருவாக்க நினைத்த அவர் தனது விருதுநகர் நண்பருடன் இணைந்து இந்த தங்கத்தை வார்த்தார். கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில், 2563 இருக்கைகளுடன் தங்கம் உருவானது. முதல் படம் பராசக்தி. தினசரி 4 காட்சிகளாக ஆரம்பித்த இப்படம் 4 மாதங்கள் ஓடியதாம். அப்போதெல்லாம் டிக்கெட் கட்டணம் குறைச்சல்தான். அதாவது நாலரை அணாதானாம். அதிகபட்ச டிக்கெட் கட்டணமே இரண்டரை ரூபாய்தான். பெயர் மட்டுமல்லாது, டிக்கெட்டும் கூட தங்கம் மாதிரி பளபளவென இருக்குமாம். பராசக்தியைத் தொடர்ந்து பல படங்கள் அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியுள்ளதாம். சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள் அந்தக்கால மதுரை பெருசுகள். இப்படிப்பட்ட அருமையான கலையரங்கைக் கொடுத்த பிச்சைமுத்துக் கோனார் மறைவுக்குப் பின்னர் தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்பதில் அவரது வாரிசுகளிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தியேட்டர் மூடப்பட்டு கோர்ட்டுக்கு வழக்கு சென்றது. 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தங்கம் தனது திரையோட்டத்தை முடித்துக் கொண்டது. கடைசியாக இங்கு திரையிடப்பட்ட படம் ஈஸ்வர். இத்தியேட்டர் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment